Published : 09 Jun 2025 06:28 AM
Last Updated : 09 Jun 2025 06:28 AM
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அடுத்த மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில், தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் பாதை இருக்கிறது. ஆனாலும், ரயில் நிலையம் இல்லை. இதனால், இங்கு மின்சார, விரைவு ரயில்களை நிறுத்த முடியாத நிலை இருக்கிறது.
இங்கு ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதையடுத்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. ரயில் நிலைய நடைமேடை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஒரு நடைமேடையில் மேல் கூரை அமைக்கப்பட்டு விட்டது.
தரைத்தளம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் உள்ளது. இதுதவிர, உயர்நிலை மின்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. டிக்கெட் புக்கிங் அலுவலகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, மற்றொரு நடைமேடைக்கான பணிகளும் நடைபெறுகின்றன. அடுத்தமாதத்துக்குள் ரயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT