குடியிருப்பு வழங்குவதில் தாமதம்; ராணுவ வீரர்களுக்கு இழப்பீடு: தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

குடியிருப்பு வழங்குவதில் தாமதம்; ராணுவ வீரர்களுக்கு இழப்பீடு: தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: ராணுவ வீரர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உரிய காலக்கெடுவுக்குள் ஒப்படைக்காததால் ஏற்பட்ட தாமதத்துக்கு ஆண்டுக்கு 9.30 சதவீத வட்டியும், சேவை குறைபாடுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுக்காக ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ராணுவ நல வீட்டுவசதி அமைப்பு சார்பில் லாப நஷ்டம் இல்லாத அடிப்படையில், சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த தாழம்பூரில் ‘தினேஷ் விஹார்’ என்ற பெயரில் இரட்டை பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு குடியிருப்புகளை வாங்கிய கேப்டன் நாகராஜன் வாசுதேவ ராவ், கமாண்டர் என்.கோடீஸ்வர், கர்னல் சி.எம்.உன்னித்தன் ஆகியோர் தங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடுகளை ஒப்படைக்கவில்லை என்றும், ரியல் எஸ்டேட் சட்ட விதிகளின்படி ‘தினேஷ் விஹார்’ திட்டத்தை பதிவு செய்து கொடுக்காததால் அதன் பலன்களை பெற முடியவில்லை என்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, ‘குடியிருப்புகளை திட்ட ரீதியாக பதிவு செய்து கொடுக்க வேண்டும். வீடுகளை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு ஆண்டுக்கு 9.30 சதவீத வட்டி வழங்க வேண்டும். மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாடுகளுக்காக தலா ரூ.1 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்’ என்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் கடந்த 2023-ம் ஆண்டு உறுதி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராணுவ நல வீட்டுவசதி அமைப்பு மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, ஆர்.கலைமதி அமர்வில் வழக்கு விசாரணை நடந்தது. மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல். சுந்தரேசனும், வீடு வாங்கியவர்கள் தரப்பில் வழக்கறிஞர் ராமசுப்பிரமணிய ராஜாவும் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு: இந்த குடியிருப்பில் வீடுகளை பெற்றவர்கள், அவற்றை ஒப்படைக்க ஏற்பட்ட தாமதத்துக்கான இழப்பீட்டை சட்ட ரீதியாக வட்டியுடன் பெற தகுதியுடையவர்கள். எனவே, பணம் செலுத்திய தேதியில் இருந்து ஒப்படைக்கப்பட்ட தேதி வரை ஆண்டுக்கு 9.30 சதவீத வட்டி வழங்க வேண்டும். சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவுக்காக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்பதால் அதை உறுதி செய்கிறோம்.

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், ராணுவ நல வீட்டுவசதி அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in