கடலூர் அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு: 4 பேர் காயம்

கடலூர் அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு: 4 பேர் காயம்
Updated on
1 min read

கடலூர்: கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கடலூர் வட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள சின்ன இருசாம் பாளையம் கிராமத்தில் முத்து மாரியம்மன் ஆலயம் செடல் திருவிழா நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்றிரவு (ஜூன்.6) சாமி ஊர்வலம் நடைபெற்றது. ஐந்து பேர் சேர்ந்து சாமியை ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். அப்பொழுது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் உரசியது.

இதில் சாமியை தூக்கிச் சென்ற ஐந்து பேர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் புதுச்சேரி, அரியாங்குப்பம் மனவெளி பெரியார் நகரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கர்ணாசந்திரன்(40) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சின்ன இருசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவமணி (22), ஹரி கிருஷ்ணன் மகன் கண்ணன் (55), பெருமாள் மகன் முருகையன் (35) மற்றும் மணிகண்டன் மகன் ஸ்ரீவேஷ் (6) ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டி சாவடி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கர்ணாசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த கர்ணாசந்திரன் சின்ன இருசாம்பாளையத்தில் உள்ள அவரது மாமனார் அரிகிருஷ்ணன் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடப்பட்டதாகும். கர்ணா சந்திரனுக்கு உமா (35) என்ற மனைவியும், ராகவன் (15) என்ற மகனும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in