Published : 06 Jun 2025 06:44 AM
Last Updated : 06 Jun 2025 06:44 AM

கிளாம்பாக்கம் நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல் - நடந்தது என்ன?

தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பாக நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். | படம்: எம்.முத்துகணேஷ் |

கிளாம்பாக்கம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன் தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது.

நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு மேல், தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் குடும்பத்தினருடன் மற்றும் குழந்தைகளுடன் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள், நள்ளிரவு 1 மணியளவில் இருந்து புறப்பட்ட ஒரு சில பேருந்துகளையும் சிறை பிடித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த மறியலில் பங்கேற்றதால், நெடுஞ்சாலையில் 3 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலை மறியல் காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிமீ தொலைவுக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பேருந்துகளை உடனடியாக இயக்கக் கோரி பயணிகள் காவல்துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கிளாம்பாக்கம் பகுதியில் பல மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 2 மணி நேரத்துக்கு பிறகு நிலைமை சரியானது.

சிங்கப்பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால், இரவில் பெருமாள் வீதி உலா வரும்போது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்தை தடை செய்து, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்துக்குள் வர வேண்டிய பேருந்துகள் கால தாமதமானதாலும், நள்ளிரவு நேரம் என்பதால் உடனடியாக போக்குவரத்து ஏற்பாடு செய்ய இயலாமல் போனது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x