Last Updated : 05 Jun, 2025 10:27 AM

8  

Published : 05 Jun 2025 10:27 AM
Last Updated : 05 Jun 2025 10:27 AM

தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு: அடுத்தது என்ன?

ராமதாஸுடன், அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

விழுப்புரம்: பாமகவில் கடந்த சில நாட்களாகவே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. அதிகார மோதல், தந்தை - மகன் உறவில் விரிசல் என்ற இந்த மோதல் போக்கு பாமக மூத்த நிர்வாகிகள் தொட்டு கடைநிலை தொண்டர்கள் வரை அனைவர் மத்தியிலும் ஆதங்கத்தை, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நிலையில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 5) காலை அன்புமணி ராமதாஸ், தைலாபுரம் இல்லத்தில் தந்தை ராமதாஸை சந்தித்தார். இது சமரசப் பேச்சுவார்த்தை என்றும் கூறப்படுகிறது. ஆனால் சுமார் 45 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்புக்குப் பின்னர் அன்புமணி காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திப்பை முடித்ததுமே அன்புமணி காரில் புறப்பட்டுச் சென்று விட்டார்.

தந்தை - மகன் சமாதானமா? இந்த சந்திப்பின்போது ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே சமரசம் ஏற்பட்டிருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்புமணியைத் தொடர்ந்து தற்போது ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சந்தித்து வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாகவே ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸ் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுத்தும் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கள நிலவரம் கண்டு கொண்டனரா? அதுதவிர மோதலுக்கு மத்தியில் ராமதாஸும், அன்புமணியும் தாம் இருவரும் பிரிந்திருந்தால் கட்சி கடைக்கோடி தொண்டர்களுக்கு வாட்டத்தை ஏற்படுத்தும், அது தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதைப் புரிந்து கொண்டதாலும் இந்த சமாதானம் எட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாமகவின் கடைசித் தொண்டனிடம் சென்று சேரும் சக்திவாய்ந்த அடையாளம் இன்றளவும் ராமதாஸ் தான் என்பதை அன்புமணியும் இந்த காலக்கட்டத்தில் புரிந்து கொண்டதாகவும், அதனாலேயே அவர் சமரசப் பேச்சுக்கு உடன்பட்டு வந்து சென்றுள்ளதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அன்புமணி வந்து சந்தித்தாலே போதும், ராமதாஸ் மனமிறங்கிவிடுவார், அதுதான் இன்றும் நடந்திருக்கும் என்ற ஊகங்களும் நிலவுகின்றன. அதேபோல், கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் அன்புமணிக்கான ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதை ராமதாஸும் அறிந்திருக்கலாம், அதனாலேயும் சமரசப் பேச்சுக்கு ஒப்புக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மகளுடன் வந்த அன்புமணி: இருப்பினும் இந்த சந்திப்பின்போது ராமதாஸ் என்ன பேசினார், என்ன நிபந்தனைகளை விதித்தார், அன்புமணி தரப்பில் ஏதேனும் கோரிக்கைகள் வைக்கப்பட்டனவா என்ற உறுதியான தகவல்கள் எல்லாம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணியுடன் அவரது 3-வது மகளும் ராமதாஸை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி மீது ராமதாஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x