அம்பையில் தாமிரபரணியின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய 20 பேர் மீட்பு

அம்பையில் தாமிரபரணியின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய 20 பேர் மீட்பு
Updated on
1 min read

அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது நீர்வரத்து அதிகரித்ததால் சிக்கிக்கொண்ட பெண்கள் உட்பட 20 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

அம்பா சமுத்திரம், காசி நாதர் கோயில் அருகில் தாமிரபரணி ஆற்றில் நேற்று மதியம் கல்லிடைக் குறிச்சி, நெசவாளர் குடியிருப்பு, வைராவிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் துணி துவைத்து குளித்துக் கொண்டிருந்தனர். ஆற்றின் நடுவே உள்ள பாறை பகுதியில் அவர்கள் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் கரையேற முடியாமல் திணறினர்.

இது குறித்து, தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பா சமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பல்வேசம் தலைமையில் தீயணைப்பு படையினர் அங்குவந்து, ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்ட 10 பெண்கள் உட்பட 20 பேரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in