“ஸ்டாலின் நிறைவேற்றும் திட்டங்களில் கருணாநிதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

சிவகாசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிவகாசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Updated on
1 min read

சிவகாசி: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் ஒவ்வொரு திட்டத்திலும் கருணாநிதி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்,” என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவை தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் அரிசி, அறுசுவை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியது: “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. நவீன தமிழகத்தின் சிற்பியான கருணாநிதி கொண்ட கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் முன்நோக்கி கொண்டு செல்ல நாம் பயணித்து வருகிறோம். தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி.

துப்புரவு பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர் என பெயர் மாற்றி, கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு முன்னேற வழிகாட்டியவர் கருணாநிதி. அவரது வழியில் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம், புதுமை பெண், மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், தமிழ் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் ஒவ்வொரு திட்டத்திலும் கருணாநிதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்,” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்வில், மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜா, மேயர் சங்கீதா முன்னிலை வகித்தனர். சிவகாசி தொகுதி பொறுப்பாளர் செண்பக விநாயகம், ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ், பகுதி செயலாளர் காளிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in