தேன்கனிக்கோட்டை கிராமங்களில் ஊர் பெயர் கன்னட மொழியில் மட்டும் இருப்பதால் குழப்பம்!

தேன்கனிக்கோட்டை கிராமங்களில் ஊர் பெயர் கன்னட மொழியில் மட்டும் இருப்பதால் குழப்பம்!
Updated on
1 min read

தேன்கனிக்கோட்டை பகுதி கிராமங்களில் தகவல் பலகைகளில் ஊர் பெயர் மற்றும் தெரு பெயரை தமிழில் எழுத வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் பாகலூர், பேரிகை உள்ளிட்ட கிராமங்கள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ளன. இப்பகுதி மக்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அதேபோல, அரசுப் பள்ளிகளிலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இக்கிராம பகுதிகளில் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் ஊர் பெயர் கன்னட மொழில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களிலிருந்து வரும் தமிழ் மொழி தெரிந்தவர்கள் ஊரின் பெயரை அறிந்து கொள்வதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, இக்கிராம தகவல் பலகையில் தமிழ் மொழியிலு ம் எழுத வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளனர். இதனால், கிராமப் பகுதிகளின் தெருக்கள் மற்றும் கிராமங்களின் பெயர் பலகைகள் கன்னட மொழியில் மட்டும் வைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களிலிருந்து வரும் தமிழ் பேசும் மக்கள் கன்னட மொழி தெரியாததால் ஊர் மற்றும் தெரு பெயர்களை அறிய முடியாமல், குழப்பம் அடைந்து திணறி வருவதோடு, மற்றவர்களின் உதவியை நாடும் நிலையுள்ளது.

அதேபோல, வணிக நிறுவனங்களிலும் தமிழ் மொழியில் பெயர்கள் இடம்பெறவில்லை. எனவே, இக்கிராமங்களில் உள்ள அனைத்து தகவல் பலகையிலும் தமிழ் மொழியிலும் ஊர் மற்றும் தெரு பெயர்களை இடம்பெறவும், வணிக நிறுவனங்கள் கட்டாயம் தமிழ் மொழியில் பிரதானமாக எழுதவும் மாவட்ட நிர்வாகம், அரசுத் துறை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in