‘டாஸ்மாக்’ முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி - வானதி சீனிவாசன் தகவல்

‘டாஸ்மாக்’ முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி - வானதி சீனிவாசன் தகவல்
Updated on
1 min read

கோவை: தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி என, வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை மக்கள் சேவை மையம், பிஎஸ்ஜி மருத்துவமனை, வேர்ல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து நடத்தும் ‘நலம் இலவச மருத்துவ முகாம்’ கோவை மாநகராட்சி 82-வது வார்டு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 1) நடந்தது.

இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நலம் மருத்துவ முகாம் மூலம் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதனை ஒட்டி வீட்டு தொடர்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தமிழகத்தில் முருகன் கோயில்கள் உள்ள இடங்களில் அரசு தலையிட்டு பல்வேறு பிரச்சினைகள் செய்வது குறித்து மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். முருக பக்தர்கள் மாநாடு ஆன்மிக எழுச்சியை உண்டாக்கும்.

அரசியல் கட்சி தொடங்கி சினிமா வசனத்தை பேசிவிட்டு இரண்டு தேர்தலில் மக்களுடைய வாக்குகளை பெற்றுவிட்டு தன்னை நம்பி கட்சி பணியாற்றியவர்களுக்கு கமல் துரோகம் செய்துவிட்டு தற்போது திமுக-வில் தஞ்சமடைந்துள்ளார்.

நாட்டில் நக்சல் தீவிரவாதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி வழங்குகிறது என்ற விவரங்கள் குறித்து பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் பேசியுள்ளார். இவர்களது இயலாமைக்கு மத்திய அரசை குறை கூறுகின்றனர்.

‘டாஸ்மாக்’ முறைகேடு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. இவ்வாறு வானதி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in