நீட் தேர்வு குறித்த விஜய் பேச்சுக்கு ஏபிவிபி கண்டனம்

நடிகர் விஜய்
நடிகர் விஜய்
Updated on
1 min read

மதுரை: நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பேச்சுக்கு ஏபிவிபி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் தென் தமிழக இணை செயலாளர் ஜெ.டி.விஜயராகவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி மாணவர்கள் மீது அக்கறையாக இருந்து அறிவுரை வழங்குவதாக கூறிக்கொண்டு தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தும் நோக்கத்தில் மாணவர்களிடம் தவறான கருத்துகளை தெரிவிக்கும் நடிகர் விஜய்யை ஏபிவிபி கண்டிக்கிறது.

நடிகர் விஜய் அரசியல் சூழ்ச்சி தெரியாத பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்து எதிர்மறை எண்ணங்களை புகுத்தி, ஒன்றிய அரசு என அரசியல் பேசி மாணவர்களிடம் வன்முறையை தூண்டி வருகிறார். தமிழகத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் அடைந்து, அதிகப்படியான ஏழை மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கடின முயற்சி எடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தி்ல் அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் நடிகர் விஜய் சேர்ந்துகொண்டு அரசியல் செய்வதை வண்மையாக் கண்டிக்கிறோம். எனவே, சாதாரண பள்ளி மாணவர்களிடம் தனது திரைப்பட கவர்ச்சியால் உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து மாணவர்களை தவறாக திசை திருப்புவதையும் மாணவர்களிடையே அரசியல் செய்வதையும் நடிகர் விஜய் தவிர்க்க வேண்டும்” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னதாக, தவெக தலைவர் விஜய் பேசும்போது, “நீட் தேர்வு மட்டும்தான் உலகமா. நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப பெரியது. அதில், மாணவர்கள் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in