கோவையில் விவசாயிகள் பயன்பெற நடமாடும் மண் பரிசோதனை வாகன சேவை தொடக்கம்

கோவையில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனத்தை ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தொடங்கி வைத்தார் | படம்: ஜெ.மனோகரன்
கோவையில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனத்தை ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தொடங்கி வைத்தார் | படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதிய நடமாடும் மண் பரிசோதனை நிலையத்துக்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் இன்று (மே 30) தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கிராமங்கள் தோறும் மண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதிய நடமாடும் மண் பரிசோதனை நிலையத்திற்கான வாகனம் இன்று (மே 30) அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து மண் பரிசோதனை கருவியின் இயக்கம் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மண் வள மேம்பாடு, மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உர பயன்பாடு மூலம் அதிக பயிர் விளைச்சல் பெற்று விவசாயிகள் லாபம் பெற மண் மாதிரி சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் மலர் வள அட்டை விநியோகத்துக்கான புதிய நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் கோவை மாவட்டத்திற்கு ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

மண் மாதிரி பகுப்பாய்வுக்கான ஆய்வக கருவிகள் பொருத்தப்பட்ட நடமாடும் மண் பரிசோதனை வாகனம் முன்னரே திட்டமிடப்பட்ட கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடமிருந்து மண் மாதிரிகளைச் சேகரித்து நடமாடும் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு அச்சிடப்பட்ட மண்வள அட்டை அன்றைய தினமே விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு மண் மாதிரி பகுப்பாய்வுக்கும் விவசாயிகளிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும்.

நடமாடும் வாகனத்தின் மண் சேகரிப்பு முகாம் குறித்து முன்னதாகவே வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு தெரிவிக்கப்பட்டு மண் மாதிரி சேகரிப்பு குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 2025-26 ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் உள்ள கிராமங்களின் மண் மாதிரி சேகரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நடமாடும் வாகனத்தில் பகுப்பாய்வுக்காக ஒரு மாதத்தில் மொத்தம் 12 மண் மாதிரி சேகரிப்பு முகாம்கள் (ஒரு வாரத்திற்கு மூன்று முகாம்கள்) என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in