நீலகிரியில் மீண்டும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் மலர்களைக் கண்டு ரசித்தனர். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் மலர்களைக் கண்டு ரசித்தனர். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
Updated on
1 min read

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் கனமழை பெய்தது. அவலாஞ்சியில் 4-ம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமே திறந்திருந்ததால், அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. 80 சதவீதம் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்பி விட்டனர். மேலும் அறைகள் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகள் ரத்து செய்து விட்டனர்.

மழையின் தீவிரம் நேற்று முன்தினம் சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் ஓடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகள் மின் உற்பத்தி மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்துக்கான முக்கிய அணைகளாக உள்ளன. கடந்த 3 நாட்களில் மேற்கண்ட பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகி இருப்பதால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, 2 நாட்களில் 10 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பிற அணைகளிலும் நீர் மட்டம் 5 அடி வரை உயர்ந்துள்ளது.

குந்தா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஒசஹட்டி, பிக்குலி, தங்காடு நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் முழு கொள்ளளவான 89 அடியை எட்டியது. விநாடிக்கு, 400 கனஅடி நீர்வரத்து உள்ளது. 2 மதகுகளில் தலா 200 கனஅடி வீதம் நேற்று முன்தினம் மாலை வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. பிற அணைகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி நேற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோடநாடு காட்சி முனை தவிர லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், கேத்தரின் நீர் வீழ்ச்சி, தொட்டபெட்டா காட்சிமுனை, பைன் பாரஸ்ட், ஷூட்டிங் மட்டம், பைக்காரா நீர் வீழ்ச்சி, கேரன்ஹில், அவலாஞ்சி ஆகிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டும் திறந்திருந்ததால், சுற்றுலா பயணிகள் பூங்காவைக் காண குவிந்திருந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பூங்காவைக் கண்டு ரசித்தனர். தொடர் மழை காரணமாக பூங்காவில் உள்ள மலர்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்களில் உள்ள மலர்கள் அழுகி பொலிவிழந்து காணப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டர்): அவலாஞ்சி 142, பாலகொலா 135, அப்பர்பவானி 129, குந்தா 96, நடுவட்டம் 68, கிளன்மார்கன் 66, எமரால்டு 64, கூடலூர் 53, ஊட்டி 48.9, சேரங்கோடு 46, பந்தலூர் 41, பாடந்தொரை 32, குன்னூர் 28 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in