சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒரு அறை தரைமட்டம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒரு அறை தரைமட்டம்
Updated on
2 min read

சிவகாசி: சிவகாசி அருகே எஸ்.அம்மாபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது.

சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி(40). இவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) அனுமதி பெற்று மாரனேரி அருகே எஸ்.அம்மாபட்டியில் கனேஷ்வரி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூலம் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தினசரி காலை 6 மணிக்கு பட்டாசு உற்பத்தி தொடங்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை.

இந்நிலையில், இன்று காலை 6 மணி அளவில் பட்டாசு உற்பத்தி செய்யும் அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு அறை தரைமட்டமானது. இதனால் 50 அடி உயரத்திற்கும் மேல் கரும்புகை எழுந்து, 3 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வெடி விபத்து ஏற்பட்டதற்கான அதிர்வு தென்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் பூட்டிய அறையில் வெடி விபத்து ஏற்பட்டதால் மருந்து கலவையில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in