முன்னுரிமை துறைகளுக்கு ரூ.9 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு

மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில், 2025-26-ம் நிதியாண்டுக்கான தமிழகத்தின் வருடாந்திர கடன் திட்ட ஆவணத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். உடன் (இடமிருந்து) மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம். மோகன், ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் ராகேஷ் 
வத்சவா, தமிழக அரசின் நிதித்துறை செயலர் டி. உதயச்சந்திரன் உள்ளிட்டோர்.
மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில், 2025-26-ம் நிதியாண்டுக்கான தமிழகத்தின் வருடாந்திர கடன் திட்ட ஆவணத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். உடன் (இடமிருந்து) மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம். மோகன், ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் ராகேஷ் வத்சவா, தமிழக அரசின் நிதித்துறை செயலர் டி. உதயச்சந்திரன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சென்னை: நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்தின் கடன் திட்ட இலக்கு ரூ.9 லட்சம் கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வங்கிகள் அதிக முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அளவிலான வங்கியாளர்கள் குழுவின் 182-வது கூட்டம், குழு ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார்.

நடப்பு 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழகத்தின் வருடாந்திர கடன் திட்ட ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். அதில், ‘நடப்பு நிதி ஆண்டில் முன்னுரிமை துறைகளுக்கான கடன் திட்ட இலக்கு ரூ.9 லட்சத்து 181 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-25-ம் ஆண்டைவிட இது 21.12 சதவீத வளர்ச்சி’ என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழகத்தில் முன்னுரிமை துறைகளுக்கு குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு கடன் வழங்குவதிலும், அரசின் ஆதரவோடு தொடங்கப்படும் திட்டங்களை செயல்படுத்துவதிலும் வங்கிகள் முனைப்புடன் பணியாற்றுவது பாராட்டுக்குரியது.

அதேநேரம், ரூ.9 லட்சம் கோடி என்ற வருடாந்திர கடன் திட்ட இலக்கை அடைய வங்கிகள் இன்னும் அதிக உற்சாகம், முனைப்புடன் பணியாற்ற வேண்டும். கடன் வைப்பு (கிரெடிட் டெபாசிட்) விகிதம் 126 சதவீதமாக இருப்பது சிறப்பு’’ என்றார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளரும், தமிழக அளவிலான வங்கியாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான எம்.மோகன் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். 2024 மார்ச்சில் ரூ.6.63 லட்சம் கோடியாக இருந்த முன்னுரிமை துறைக்கான கடன்கள், 2025 மார்ச்சில் ரூ.7.43 லட்சம் கோடியாக அதிகரித்து, 11.93 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தலைவரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநருமான டி.தனராஜ், தமிழக நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், மத்திய நிதித் துறை துணை செயலர் ஜெ.எஸ்.முகமது அஷ்ரஃப், ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் ராகேஷ் ஸ்ரீவத்சவா, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் ஆர்.ஆனந்த், தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், அனைத்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in