கிருஷ்ணகிரி அணையில் இருந்து 4,500 கனஅடி நீர் திறப்பு: 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 4,500 கனஅடி நீர் திறப்பு: 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 4,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் பாதுகாப்பை கருதி, நீர்வரத்து முழுவதும் மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தினேஷ் குமார் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையாலும், கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று (20ம் தேதி) காலை 8 மணிக்கு, விநாடிக்கு 3,208 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 12 மணியளவில் 4,500 கனஅடியாக அதிகரித்தது.

அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக இருந்ததால், அணையில் இருந்து விநாடிக்கு 4,500 கனஅடி தண்ணீர், 3 மணல் போக்கி சிறிய மதகுகள் மற்றும் பிரதான 3 மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் சீறி பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கிய படி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக, தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இரு பகுதிகளிலும் அணை போலீஸார், யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை: தென்பெண்ணை ஆறு செல்லும் கடந்து செல்லும் காவேரிப் பட்டணம், பென்னேஸ்வர மடம், நெடுங்கல் உட்பட செல்லும் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொடர்புடைய ஊராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் வரை 3 மாவட்டங்களில் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6 இடங்களில் மணல் மூட்டைகள் தயார்: இதனிடையே, இன்று கிருஷ்ணகிரி அணையில் ஆட்சியர் ச.தினேஷ் குமார், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் கூறும்போது, தென்பெண்ணை ஆற்றங்கரையோர பொதுமக்கள் ஆறு மற்றும் நீர் நிலைகளை கடக்கவோ, கால்நடைகளை ஆற்று பகுதிகளுக்கு கொண்டு செல்லவோ கூடாது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, பாரூர் பெரிய ஏரி உள்ளிட்ட 6 இடங்களில் மணல் மூட்டைகள் தயார் நிலையிலும், கிருஷ்ணகிரி அணையில் மட்டும் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின் பொது, கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் பொன்னிவளவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ஓசூரில் அதிகப்பட்சம் 72.4 மி.மி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை முதல் லேசான மழை தூரல் மட்டுமே காணப்பட்டது. மேலும், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீரின்றி வறண்டு காணப்பட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இன்று (20-ம் தேதி) காலை 7 மணி நிலவரப்படி (மழையளவு மில்லி.மீட்டரில்): ஓசூரில் அதிகப்பட்சம் 72.4, தேன்கனிக்கோட்டை 57, நெடுங்கல் 49, சின்னாறு அணை 45, சூளகிரி 40, தளி, கெலவரப்பள்ளி அணையில் தலா 30, பாரூர் 28, அஞ்செட்டி 15.1, கிருஷ்ணகிரி 10.6, ராயக்கோட்டை 7, கிருஷ்ணகிரி அணை 2.8, போச்சம்பள்ளி 2.மிமி பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in