கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழ்நாடு அனைத்து போட்டி தேர்வு அமைப்பு சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

Published on

சென்னை: டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளது போல 49 வயது வரை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துப்போட்டி தேர்வு அமைப்பு சார்பில், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளது போல 49 வயது வரை உயர்த்த வேண்டும்; வெளிப்படைத்தன்மையுடன் டிஎன்பிஎஸ்சி செயல்பட வேண்டும்; தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு 20 சதவீதம் வழங்க வேண்டும்.

தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும்; முதன்மை (மெயின்ஸ்) தேர்வு மதிப்பீட்டினை நியாயமான முறையில் வழங்க வேண்டும்; ஆங்கில விடையே இறுதியானது என்பதை மாற்றி தமிழ் விடைகளே இறுதியானது என மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துப்போட்டி தேர்வு அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

இதில், இந்த அமைப்பின் தலைவர் கலீல்பாஷா, செயலாளர் திருக்குமரன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது, தமிழ்நாடு அனைத்துப் போட்டி தேர்வு மாணவர் அமைப்பு தலைவர் கலீல்பாஷா கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் -2 ஏ தேர்வு முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. இந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு வழிகளில் மாணவர்கள் எழுதி உள்ளனர். ஆங்கிலம் வழி எழுதியவருக்கு 90 சதவீதம் தேர்ச்சி வழங்கி உள்ளனர்.

தமிழ் வழியில் 10 சதவீதமே தேர்ச்சி வழங்கி உள்ளனர். தமிழக அரசு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால், இத்தேர்வில் தமிழ் வழி தேர்வு எழுதுபவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவரை சந்தித்து பேசினோம். அவர் சரியான பதில் தரவில்லை.

சட்டப்பேரவை தேர்தல் போது, 5 ஆண்டுகளில் 3 லட்சம் காலிபணியிடங்களை நிரப்பப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், 4 ஆண்டு ஆட்சியில் 30 ஆயிரம் காலிபணியிடங்கள் கூட நிரப்பவில்லை. அதாவது 10 சதவீதம் கூட நிரப்பவில்லை. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சமூக நீதி தொடர்பாக தமிழக முதல்வர் வலியுறுத்தி பேசி வருகிறார். மற்ற மாநிலங்களில் அதாவது சமூகநீதி பின்பற்றாத 12 மாநிலங்களில் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பு 49 முதல் 51 வரை உள்ளது. எனவே, குரூப்-1 தேர்வுக்கான வயது உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம், பெண்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். தேர்வு முடிவுகளை ஆண்டு தோறும் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in