

வால்பாறை: திருப்பூரில் இருந்து கோவை வால்பாறையை நோக்கி 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்பாறைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து பயணித்தது. ஓட்டுநர் கணேசன் (49), நடத்துநர் சிவராஜ் ஆகியோர் பணியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கவர்கல் பகுதியில் கார்ல் மார்க்ஸ் சிலையை தாண்டி சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த 33-வது கொண்டை ஊசிவளைவில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த மக்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினர்.
மேலும், விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வால்பாறை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த 14 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வால்பாறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.