மதுரை சித்திரை திருவிழாவில் மயங்கி விழுந்து பொறியாளர் உயிரிழப்பு

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வினைக் காண வைகை ஆற்றில் குவிந்திருந்த பக்தர்கள் | படம்: ஜி.மூர்த்தி
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வினைக் காண வைகை ஆற்றில் குவிந்திருந்த பக்தர்கள் | படம்: ஜி.மூர்த்தி
Updated on
1 min read

மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றிருந்த பொறியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும், சாலையோரம் இறந்த நிலையில் கிடந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

அப்பகுதியில், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (65) என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிநாதனை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியாத சூழல் உருவானது.

இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் அங்கும் இங்குமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டது. பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டுச் சென்றது. மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதேபோல் சாலையோரம் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள், பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in