கள்ளழகர் வேடமிட்ட நடிகர் விஜய் போஸ்டர்கள் - மதுரையெங்கும் ஒட்டிய தவெகவினர்

கள்ளழகர் வேடமிட்ட நடிகர் விஜய் போஸ்டர்கள் - மதுரையெங்கும் ஒட்டிய தவெகவினர்
Updated on
1 min read

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் வேடமிட்ட நிலையில் நடிகர் விஜயின் போஸ்டர்களை மதுரையெங்கும் தவெகவினர் ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி பல்வேறு கூட்டங்களை நடத்துகிறார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ரம்ஜான் மாதத்தில் இப்தார் விருந்து போன்ற நிகழ்வுகளில் அவர் பங்கேற்று பேசினார்.

இந்நிலையில் கோடை வெயிலையொட்டி, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நீர், மோர் பந்தலும் திறந்து மக்கள் விநியோகிக்கின்றனர். தற்போது, மதுரையில் கள்ளழகர் சித்திரை திருவிழா முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில், பக்தர்களை வரவேற்கும் விதமாக மதுரை வடக்கு மாவட்ட தவெக நிர்வாகி விஜய் அன்பர் விசு மற்றும் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் பேசு பொருளாக மாறியுள்ளன.

அதில், நடிகர் விஜய் கள்ளழகர் வேடமிட்டபடி தலையில் தலைப்பாகையுடன் உடல் முழுவதும் நாமம் தரித்தபடியான படத்துடன் பதிவிட்டு ‘விவசாயிகளின் நிலை உந்தன் வருகையால் தளிரட்டும், தமிழ்நாட்டின் தளபதியே' என்ற அடுக்கு மொழி வசனங்களும் இடம் பெற்றுள்ளன. ஒருபுறம் கள்ளழகர் போல நடிகர் விஜயை அலங்கரித்து, மற்றொருபுறம் கிருஷ்ணர் படத்துடன் 'ஆயனே அழகனே' என்ற வசனத்தையும் போஸ்டர்களில் பதிவிட்டு ஒட்டியுள்ளனர்.

சமீபத்தில் கொடைக்கானலில் நடந்த 'ஜனநாயகன்' என்ற சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, கள்ளழகர் போல வந்தார் என, தவெகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in