சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் மையம் திறப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் மையம் திறப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் ஆய்வகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பிரிவு முன்னாள் இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் இயற்றிய செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் கையேட்டை வெளியிட்டனர். பின்னர், ரூ.14 லட்சம் செலவில் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை - சிகிச்சை மையம் மற்றும் ரூ.94 லட்சம் செலவில் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்துவைத்தனர்.

சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், துணை முதல்வர் கவிதா, நீரிழிவு நோயியல் துறை இயக்குநர் தர்மராஜன், காது, மூக்கு, தொண்டை நிலைய இயக்குநர் சுரேஷ்குமார், பேராசிரியர் பாரதிமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கெனவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் `காக்ளியர் இம்ப்ளான்ட்' என்கிற காது வால் அறுவை சிகிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை ஆய்வகம் தொடங்கப்பட்டிருப்பது ஒரு புதிய முயற்சி ஆகும். தமிழகத்தில் பணிபுரியும் காது, மூக்கு, தொண்டை பிரிவு சிறப்பு மருத்துவர்களுக்கான பயிற்சிகள் ஆய்வகத்தில் வழங்கப்படும்.

தமிழகத்திலேயே இந்த மருத்துவமனையில்தான் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை தோறும் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், மனநல மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் தோல் மருத்துவம், பாலியல் ரீதியாக பரவும் நோய்த் தொற்று ஆகியவற்றை உள்ளடக்கிய பல்துறை அணுகுமுறைகளை இந்த சேவை மையம் வழங்கும்.

இளைய சமுதாயத்தினரிடையே இருக்கின்ற மது, புகை மற்றும் போதைப் பழக்கங்களினால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், பாலியல் ரீதியாக பரவும் நோய் தொற்றுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மையம் செயல்படவுள்ளது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், நோவோ நோட்ரிக்ஸ் கல்வி அறக்கட்டளை ஆகிய 2 அமைப்புகள் சேர்ந்து சிஎஸ்ஆர் நிதி ரூ.94 லட்சத்தில் நீரிழிவு நோய்க்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பு 10.4 சதவீதமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு, கூடுதல் சிகிச்சைகள் வழங்க பல்வேறு உபகரணங்களுடன் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in