ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
Updated on
1 min read

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் பேசும்போது, "விராலிமலை தொகுதியில் அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு திடலில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா? எங்கெல்லாம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக எப்போதும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர முடியுமா?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து பேசியதாவது:அன்னவாசல் பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு திடலில் தற்காலிகமாக டேங்கர் மூலம் குடிநீர் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்தும் தற்காலிகமாக குடிநீர் வழங்கப்படுகிறது. மேல்நிலை நீர் தேக்க தொட்டி அவசியம் எனில், அதுவும் கட்டி தரப்படும். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் எல்லாம் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

அன்னவாசல் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற போதிய அளவு அரசு நிலம் இருந்தால், அந்த இடத்துக்கு மாற்றப்படும். போதிய இடம் இல்லாத நிலையில், தனியார் நிலம் இருந்தால், அதற்குறிய தொகையை அரசு வழங்கி, அரசு கையகப்படுத்தும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in