திருவாலங்காடு ரயில் தண்டவாள சம்பவம்: 100 பேரிடம் ரயில்வே தனிபடை தீவிர விசாரணை

திருவாலங்காடு ரயில் தண்டவாள சம்பவம்: 100 பேரிடம் ரயில்வே தனிபடை தீவிர விசாரணை
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாள பகுதியில் இரு வேறு இடங்களில் போல்ட், நட்டுகள் மர்ம நபர்களால் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அரிசந்திராபுரம், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் - மோசூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அரிசந்திராபுரம் என்ற இடத்தில், சென்னை நோக்கி விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் நேற்று அதிகாலை திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது ரயில்வே ஊழியர்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, ரயில்வே பாயின்ட் மேன் சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டபோது, அந்த தண்டவாள இணைப்பு பகுதியில் போல்ட், நட்டுகள் மர்ம நபர்களால் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவாலங்காடு ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில்கள் சென்னை நோக்கி மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், அரிசந்திராபுரம் பகுதியில் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் ஒரு போல்ட்டில் நட்டுகள் மட்டும் மர்ம நபர்களால் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த, தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பகுதிகளில் மர்ம நபர்களால் கழற்றப்பட்ட போல்ட் நட்டுகளுக்கு பதில் புதிய போல்ட் நட்டுகளை பொருத்தி, தண்டவாளம் மற்றும் சிக்னல் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்பணி முடிவுக்கு வந்ததையடுத்து, நேற்று காலை 9 மணி முதல் சென்னை நோக்கி விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அரக்கோணம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ரயில்வே போலீஸின் 3 தனிபடை போலீஸார், சம்பவ நடந்த பகுதிகளிலும், அதனையொட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அரிசந்திராபுரம் மற்றும் திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் போல்ட் நட்டுகள் கழற்றப்பட்ட சம்பவம், ரயில்களை கவிழ்ப்பதற்கான சதியா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in