Published : 26 Apr 2025 03:36 PM
Last Updated : 26 Apr 2025 03:36 PM
சென்னை: தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாக தொடர்ந்து கண்காணித்து விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 5 அறைகள் இடிந்து சேதமடைந்தன. இப்படி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தொடர் விபத்தால் பட்டாசுத் தொழில் பாதிக்கப்படுகின்றன. மேலும் பட்டாசுத் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது ஏற்படும் வெடி விபத்தால், தீ விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு, தொழிலாளர்கள் காயமடைவது, கட்டிடங்கள் சேதமுறுவது, பொருளாதார இழப்பு ஏற்படுவது என நீடிக்கிறது. இதற்கு காரணம் என்ன. ஆலை நிர்வாகம் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா, இதனை தமிழக அரசு சரியாக தொடர்ந்து கண்காணிக்கிறதா என்றால் கேள்விக்குறியே.
எனவே தமிழக அரசு தமிழகத்தில் எந்த பட்டாசு ஆலையிலும் வெடி விபத்து, தீ விபத்து ஆகியவை நடைபெறாமல் இருக்க உடனடி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக இப்போது ஏற்பட்டிருக்கும் வெடி விபத்திற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கி, காயமடைந்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமாகா (மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT