மதுரை சித்திரை திருவிழா நாட்களில் மதுபான கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: மதுரை சித்திரை திருவிழா நாட்களில் மதுபான கடைகளை மூடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை அண்ணா நகரை சேர்ந்த ராமமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையின் பல்வேறு இடங்களில் மருத்துவ சேவைகளை வழங்கவும், அன்னதானம் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் பறக்கும் படைகளை அமைக்கவும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும், சித்திரை திருவிழா காலங்களில் டாஸ்மாக் கடையை மூடவும் உத்தரவிட வேண்டும்." என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு இன்று (ஏப்.22) விசாரித்தது. அரசுத் தரப்பில், “சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுகிறது. ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “மதுரையில் இத்தனை ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் சித்தரை திருவிழா நடந்து வருகிறது. அவ்வாறு இருக்கும் சூழலில் ஏன் ஒரு மனுவை தாக்கல் செய்து பிரச்சினையை உருவாக்க வேண்டும்? மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in