

புதுச்சேரி: அரசியலமைப்பு சட்டத்தை பாஜக சிதைக்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மோகன் குமாரமங்கலம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மோடி, அமித்ஷாவின் கைக்கூலியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது. அமலாக்கத்துறை அமித்ஷா துறையாக மாறியுள்ளது.
அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை போலி வழக்கு பதிவு செய்து பாஜகவில் இழுப்பது வாடிக்கையாக உள்ளது. நேஷனல் ஹெரால்டு நாளிதழை காப்பாற்ற காங்கிரஸ் ரூ.90 கோடியை 10 ஆண்டுகளில் கொடுத்து நடத்தியது. அதன் சொத்துகள் அனுபவிக்க முடியாது. அதனை நடத்துவதற்குத்தான் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக ஆகினர். இந்த வழக்கில் குற்றமே இல்லை, ஆதாரமே இல்லை. ஆனால் சோனியா, ராகுலை அழைத்து விசாரிக்கின்றனர்.
பாஜகவினர் தாக்கல் செய்த குற்ற பத்திரிகையை கூட வெளியிடவில்லை. காங்கிரஸூக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொண்டுள்ளது. 2-ஜி வழக்கில் பாஜகவால் குற்றம் நிரூபிக்க முடிந்ததா? என்றால் இல்லை. அந்த வழக்கில் இருந்து எல்லோரும் வெளியே வந்துவிட்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு முழுமையாக பழிவாங்கும் நடவடிக்கை. பாஜகவை எதிர்க்கும் ராகுல், சோனியா மீது திட்டமிட்டே வழக்கு பதியப்படுகிறது. இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் போலியான வழக்கு.
காங்கிஸூக்கு குற்ற பத்திரிகையை வழங்காதது ஏன்? வருமான வரித்துறை ரூ.432 கோடி முறைகேடு என கூறுகிறது. ஆனால் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் என பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைவர்களை அவமதிக்கும் வகையில் இந்த புகார் கூறப்படுகிறது. இதை காங்கிரஸ் சட்டரீதியாக சந்திக்கும். என்றார்.
புதுச்சேரி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி கூறும்போது, தமிழக அரசுக்கு சாதகமாக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை பாஜகவினர் கண்டிக்கின்றனர். உச்சநீதிமன்றத்தை நாடாளுமன்றத்தில் உள்ள எம்பிக்கள் மிரட்டுகின்றனர்.
அரசியல் அமைப்பு சட்டத்தையே சிதைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றம் பெரியதா அல்லது உச்சநீதிமன்றம் பெரியதா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றார்கள். அது பேசும் பொருளாக மாறியுள்ளது.
பாஜக எம்பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும்போது இடைமறித்து சொந்தரவு செய்வதே அவரது வேலை. அவர் உச்சநீதிமன்றத்தினால் தான் மதக்கலவரங்கள் வருகின்றன. அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற விவகாரங்களில் அவர்கள் தலையிடக்கூடாது என்று கூறியுள்ளார். அதேபோன்று நாட்டின் குடியரசு துணைத் தலைவர் உச்சநீதிமன்றம் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருப்பது வேதனையானது. அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் முயற்சியில் பாஜகவின் ஈடுபடுகின்றனர்.
இதை கண்டித்தும், அரசியலமைப்பு பாதுகாக்கவும் புதுச்சேரியில் வரும் மே 1 ஆம் தேதி புதுவையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். மே 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மாவட்டரீதியில் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கு விபரத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும்.
மே 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து தொகுதிதோறும் போராட்டம் நடத்தப்படும். மே 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வீடுகள் தேடிச்சென்று மக்களை சந்திக்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.