“பெரியார் பேசாத எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை!” - கே.எஸ்.அழகிரி கருத்து

“பெரியார் பேசாத எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை!” - கே.எஸ்.அழகிரி கருத்து
Updated on
1 min read

பழநி: பெண்கள் குறித்து அவதூறாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு தான். ஆனால், பெரியார் பேசாத எதையும் அவர் பேசவில்லை என, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கட்கிழமை தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது.

பாஜக அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுவதாக இருக்கிறது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் சட்டத்தின் வழியில் நின்று வெற்றிப் பெற்று வேந்தராகி இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். ஆனால், அதை ஆளுநரால் பொறுக்க முடியவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி வலிமையற்ற கூட்டணி. எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிமுக சிதைந்து கொண்டிருக்கிறது. ஒரு கூட்டணி அமைத்தால் எழுச்சி வரும். ஆனால், அந்த கூட்டணியில் அப்படி இல்லை. இந்த கூட்டணியால் அதிமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்.

2026 தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி அதிக இடங்களை கேட்போம். பெண்கள் குறித்து அவதூறாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு தான். ஆனால், பெரியார் பேசாததை எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை. அரசு நிகழ்ச்சியில் அவர் அதுபோல பேசவில்லை. திராவிடர் கழக கூட்டத்தில் தான் அப்படி பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவரது தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. அவர் அப்படி பேசியதற்காக தண்டிக்கப்பட்டு விட்டார். ஒரு தவறுக்கு ஒரு தண்டனை தான் கொடுக்க வேண்டும். தேர்தல் நெருங்குவதால் மற்ற கட்சியினர் அமைச்சர் பொன்முடியை குறிவைத்துள்ளனர். சவுக்கு சங்கர் வீட்டில் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அதற்கு, காரணமாக எந்த ஆதாரமும் இல்லாமல் மாநில தலைவர் செல்வபெருந்தகையை தொடர்புப்படுத்தி பேசுவது நியாயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in