2026-ல் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி; விஜய் கட்சி 2-வது இடத்தை பிடிக்கும்: தமிழிசை கணிப்பு

2026-ல் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி; விஜய் கட்சி 2-வது இடத்தை பிடிக்கும்: தமிழிசை கணிப்பு
Updated on
1 min read

சென்னை: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்றும் விஜய் கட்சி இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் பீம ஜோதியை எடுத்து செல்ல பாஜக பட்டியல் அணியினருக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. சுதந்திரத்துக்காக போராடியவர்கள், ஜனநாயகத்துக்கு அடித்தளமிட்டவர்களுக்கு ஜோதியை எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லியாக வேண்டும்.

அரசு விழாவுக்கு அழைக்கப்பட்ட அம்பேத்கரின் பேரனை வரவேற்க அமைச்சர் உட்பட யாரும் செல்லவில்லை. போட்டோ ஷுட்டுக்காக மட்டுமே அவரை அழைத்திருக்கிறார்கள் என தெரிகிறது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி மட்டுமல்ல, பெண்கள் விரோத ஆட்சியும் நடைபெறுகிறது. பெண்களை பற்றி அமைச்சர் பொன்முடி கேவலமாக பேசியதற்கு கட்சி பதவியை மட்டுமல்ல அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும். எ.வ.வேலுவும் இந்தியில் கேவலமான வார்த்தைகளால் பாடல் பாடியிருக்கிறார். தமிழக பெண்கள் இவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது. மீன்பிடி தடை உதவித்தொகை ரூ.8,000-ஐ ரூ.15,000 ஆக உயர்த்த வேண்டும்.

2026-ல் பாஜக பங்கெடுக்கும் கூட்டணி ஆட்சிதான் இருக்கும். அமித் ஷா கூட்டணியை அறிவித்து சென்ற நாள் முதல், திமுகவில் உள்ள அனைவருக்கும் தூக்கம் போய்விட்டது. திமுக அமைத்திருப்பது பொருந்தாத கூட்டணி. பாஜக அமைத்திருப்பது மக்கள் நல கூட்டணி. தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடிக்கத் தான், விஜய்க்கும், திமுகவுக்கும் போட்டி. அதில் விஜய் 2-வது இடத்தை பிடிக்கலாம். நாங்கள் முதல் இடத்துக்கு வருவோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in