பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு: ​அதிமுக முன்னாள் எம்எல்ஏ விலகல்

பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு: ​அதிமுக முன்னாள் எம்எல்ஏ விலகல்
Updated on
1 min read

பாஜக கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுகவில் இருந்து விலகுவதாக காரைக்காலைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கேஏயு.அசனா அறிவித்துள்ளார்.

காரைக்காலைச் சேர்ந்தவர் கேஏயு.அசனா, அதிமுக முன்னாள் எம்எல்ஏவான இவர், காரைக்கால் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தார். இந்நிலையில், தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து காரைக்காலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2016-ல் அதிமுக சார்பில் தனித்து போட்டியிட்டு காரைக்கால் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றேன். ஆனால், 2021 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். தமிழகத்திலும் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் அமைத்த கூட்டணிதான் காரணம் என்றும், இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அறிவித்தார். மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தபோதும், சிறுபான்மை மக்களுடன் துணையாக நின்று 2029 மக்களவைத் தேர்தலைச் சந்திப்போம் என்றார். ஆனால், தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

இது, சிறுபான்மை மக்களை வேதனையடையச் செய்துள்ளது. எனவே, நான் அதிமுகவில் இருந்து விலகிக் கொள்கிறேன். அடுத்தகட்ட முடிவு குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in