Published : 12 Apr 2025 05:55 AM
Last Updated : 12 Apr 2025 05:55 AM

கர்நாடக, கேரள மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் கொண்டுவர முடியுமா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

சென்னை: மேகேதாட்டு அணை, காவிரி நதிநீர், முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா, கேரளா அரசை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனி தீர்மானம் கொண்டுவர முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களே திகழும். ஆனால், திமுக ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது.

இதனை முதல்வர் ஸ்டாலினும் நன்கு உணர்ந்தே இருக்கிறார். அதனால் தான், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து இவைகளை திசைதிருப்ப வரிசையாக நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்து டெக்னிக் எல்லாம் இன்னும் மக்களிடம் செல்லுபடியாகும் என்று நம்புகிறீர்களா. வாய்ப்பே இல்லை. இவ்வளவு தீர்மானங்களை வரிசை கட்டிக்கொண்டு வருபவர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன். விசுவாசம் தடுக்கிறதா.

கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருடன் பல கூட்டங்களில் கொஞ்சிக் குலாவி கொண்டிருக்கும் நீங்கள், ஒரு முறையாவது காவிரி குறித்து பேசியதுண்டா. மேகேதாட்டு அணை தமிழகத்துக்கு நன்மை தரும் என்று தமிழகத்திலேயே கர்நாடக முதல்வரை பேசவிட்டு வேடிக்கை பார்த்தவர் தானே நீங்கள்.

கேரள கம்யூனிஸ்ட் முதல்வருடன் பல மேடைகளை பகிர்ந்துகொண்டு கைகுலுக்கி கொண்டிருக்கும் நீங்கள். ஒரு முறையாவது முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் மாநில உரிமை குறித்து, ஒரு கோரிக்கையாவது வைத்தது உண்டா. 2009-14 வரை கூட்டணி ஆட்சியில் கையெழுத்து போடும் அளவுக்கு காங்கிரசுக்கு சாசனம் எழுதிவிட்டு, மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்த எஜமான விசுவாசிகள் நீங்கள் தானே. இலங்கை இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, காங்கிரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு, எத்தனை அமைச்சர் என விவாதித்து கொண்டிருந்தவர்கள் தானே நீங்கள்.

2ஜி இமாலய ஊழல் வழக்கில் திகார் சிறையின் கதவுகள் அழைத்த போதும், அறிவாலய மேல் மாடியில் ரெய்டு நடந்த போதும், அன்றைக்கு உங்களை மிரட்டிய உங்கள் காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடைந்து, உங்கள் கட்சியையே அடகு வைத்தவர்கள் தானே நீங்கள். அறிவாலய கதவுகளை மூடிக்கொண்டாலும் உங்களின் கெஞ்சல், கதறல் சத்தம் அன்றைக்கு தமிழகம் முழுக்க தான் நன்றாக கேட்டதே.

இவ்வளவு ஏன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நீட் என்ற தேர்வை அறிமுகம் செய்தவரே உங்கள் கட்சியை சேர்ந்த அன்றைய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தானே. இப்படிப்பட்ட வரலாறு கொண்ட உங்களுக்கு, அதிமுக பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. முதல்வருக்கு நேரடியாக சவால் விடுகிறேன்.

தொடர்ந்து தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டுடன், மேகேதாட்டு அணை, காவிரி நதிநீர் விவகாரங்களில் செயல்படும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை மதிக்காமல் செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தும் அரசினர் தனி தீர்மானத்தை முடிந்தால் சட்டப்பேரவையில் கொண்டுவாருங்கள் பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x