17 மாதமாக வாடகை தராததால் சார் பதிவாளர் அலுவலகத்தை பூட்டிய உரிமையாளர் - கழுகுமலையில் பரபரப்பு

17 மாதமாக வாடகை தராததால் சார் பதிவாளர் அலுவலகத்தை பூட்டிய உரிமையாளர் - கழுகுமலையில் பரபரப்பு
Updated on
2 min read

கோவில்பட்டி: கழுகுமலையில் 17 மாதங்களாக வாடகை தராததால் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலகேட் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானது என்பதால், அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இதனால், சார் பதிவாளர் சங்கரன்கோவில் சாலையில் உள்ள கந்தசாமி என்பவரின் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு, கடந்த 12.09.2023 முதல் இயங்கி வருகிறது.

அப்போது கந்தசாமியிடம் சார் பதிவாளர் துறை சார்பில் வாடகை பேசப்பட்டுள்ளது. இதில், முதலில் மாத வாடகையாக ரூ.40 ஆயிரம் கேட்டப்பட்டதாகவும், அதனை சார் பதிவாளர் துறை ஏற்றுக் கொள்ளவில்லையெனவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அதிகாரிகள் கட்டிட உரிமையாளரான கந்தசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாதம் ரூ.18,780 என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த தொகையையும் கடந்த 17 மாத காலமாக வழங்கப்படவில்லை. இதற்கிடையே, புதிய சார் பதிவாளர் அலுவலகத்தின் கட்டிடப்பணிகள் நிறைவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்டிட உரிமையாளர் கந்தசாமி கடந்த 3-ம் தேதி கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது எந்தவித விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை. சார் பதிவாளர் அலுவலகம் கடந்த 4-ம் தேதி வழக்கம் போல் செயல்பட்டது. அன்று மாலை அலுவலகத்தின் வெளிக்கதவை பூட்டி பூட்டுப்போட்டு விட்டு அலுவலர்கள் சென்றனர்.

இந்நிலையில், இன்று காலை கட்டிட உரிமையாளர் கந்தசாமி, சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, ஏற்கெனவே பூட்டு போடப்பட்டிருந்த நிலையில், அவர் தனியாக ஒரு பூட்டு போட்டார். 9.30 மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த பணியாளர்கள் பூட்டு போட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தொடர்ந்து, மாவட்ட பதிவாளர் மற்றும் நேரில் வந்து கந்தசாமியிடம் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்துவிட கேட்டுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அவர் அலுவலகத்தில் இருந்த பூட்டை கழற்றினார். அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் விரைவில், கட்டிடத்துக்கான வாடகை பணம் முழுமையாக வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை பத்திரப் பதிவு நடைபெறாமல் பொதுமக்கள் காத்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in