Last Updated : 06 Apr, 2025 06:47 PM

 

Published : 06 Apr 2025 06:47 PM
Last Updated : 06 Apr 2025 06:47 PM

செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்: பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய தூக்கு பாலம் திறப்பு விழாவுக்குச் சென்றவர்கள் புதிய பாலத்தின் பின்னணியில் செல்ஃபி எடுக்க குவிந்ததால் பாம்பன் பாலத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாம்பன் பதிய தூக்கு பாலத்தை திறப்பதற்காக இலங்கையிலிருந்து இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி மண்டபம் வந்திறங்கினார். பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பலர் வரவேற்றனர்.

மண்டபம் வந்ததும் பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டுக்கு மாறினார். பின்னர் பாம்பன் சென்ற பிரதமர், பாம்பனில் பேருந்துகள் செல்லும் பாலத்திலிருந்து புதிய தூக்கு பாலத்தை திறந்துவைத்து முதல் ரயில் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.

புதிய பாலத்தில் ரயில் கடந்து சென்றதும் பாலம் மேலே உயர்த்தப்பட்டது. ஒரே நேரத்தில் பழைய பாலமும் திறக்கப்பட்டது. அந்த வழியாக இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பல் கடந்து சென்றது. கப்பலில் இருந்த கப்பற்படை வீரர்கள் தேசிய கொடியை அசைத்தவாறு சென்றனர்.

பாலம் திறப்புவிழா முடிந்து பிரதமர் மோடி ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றார். அங்கு பிரதமருக்கு பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலில் தரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார்.

கோயில் தரிசனம் முடிந்து ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். ராமேஸ்வரம் -தாம்பரம் முதல் ரயில் போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். பிரதமர் விழாவுக்கு கூரை வடிவில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் போதுமான காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் விழாவில் பங்கேற்றவர்கள் அவதிப்பட்டனர்.

பிரதமர் மோடிக்கு ராமரின் பட்டாபிஷேக ஓவியத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரிசாக வழங்கினார். தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர் சிலையை பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.

பாம்பன் தூக்கு பாலம் திறப்பு விழாவுக்காக தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் ராமேஸ்வரம் வந்திருந்தனர். இவர்கள் விழா முடிந்து திரும்பிச் செல்லும் போது பாம்பன் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலர் பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு புதிய பாலத்தின் பின்னணியில் செல்ஃபி எடுத்ததால் நெரிசல் அதிகரித்து வந்தது. இதனால் பாம்பன் பாலத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x