“இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சம் தொட்ட தமிழகம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு
Updated on
1 min read

தூத்துக்குடி: மத்திய அரசின் புள்ளியியல் ஆய்வறிக்கையின் படி இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டியுள்ளது என நிதி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இன்று ஸ்டார்ட் அப் திட்டத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்காக நடந்த “புத்தொழில் களம்” நிகழ்ச்சியில் நிதி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாடு அரசு நிகழாண்டு நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக வெளியிட்ட நிதிநிலை ஆய்வறிக்கையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது. மேலும், சிறந்த பொருளாதார நிபுணர்களான ரெங்கராஜன், கே.ஆர்.சண்முகம் ஆகியோர் தங்களது அறிக்கையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தனர்.

தற்போது மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி நிலைத்த விகிதங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில், இந்த வளர்ச்சி எட்ட முடியாத வளர்ச்சி ஆகும். தமிழக முதல்வர் கடந்த 4 ஆண்டுகளில் எடுத்த பல்வேறு முயற்சிகளில் வழியாக இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது. அதன்படி ரூ.15.75 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் பொருளாதாரம் நிகழாண்டு ரூ.17.23 லட்சம் கோடியாக உயர இருக்கிறது.

தமிழகத்தில் விவசாயம், உற்பத்தி துறை, சேவை துறை ஆகியவற்றில் இந்த விகிதங்கள் மிகுந்த பங்கு வகித்துள்ளது. எனவே, முதல்வர் கூறியதைப் போன்று, வரும் 2030-ம் ஆண்டு ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை பெறக்கூடிய அளவிற்கு இந்த வளர்ச்சி விகிதம் உள்ளது” என்று அவர் கூறினார். அப்போது அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in