

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது.
சென்னை - சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டு பிளெஸ்ஸிஸ் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. சென்னை அணியில் கான்வே விளையாடுகிறார். இந்த ஆட்டத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அவர் இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்.
கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் ஜேக் பிரேசர் மெக்கர்க் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து வந்த அபிஷேக் போரெல் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 21, சமீர் ரிஸ்வி 20 ரன்கள் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார். 51 பந்துகளில் 77 ரன்களை அவர் எடுத்தார். 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை ராகுல் விளாசினார். அசுதோஷ் ரன் அவுட் ஆனார். ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி 200 ரன்களை எட்டும் நிலை இருந்தது. ஆனால், அதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுத்தது. சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா, நூர் அகமது, பதிரனா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். இந்தப் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 184 ரன்கள் தேவை. சென்னை அணிக்காக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை தொடங்கியுள்ளனர்.