

சென்னை: அண்ணாசாலையில் உள்ள ஓட்டலுக்கு ஆய்வுக்கு வந்தபோது, உடல்நிலை சரியில்லாததால் திரும்பிச் சென்றதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் விளக்கமளித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிரியாணி கடையில் சாப்பிட்டவர்கள் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கடையை சோதனை செய்ய வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கடையின் உரிமையாளர்களைத் தொடர்புகொள்ள முடியாததால் கடையை தற்காலிகமாக பூட்டிவிட்டு சென்றனர். அதேபோல் அண்ணாசாலையில் உள்ள மற்றொரு ஓட்டல் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையொட்டி அந்த ஓட்டலை சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்ய வந்தபோது, திடீரென அவர்கள் திரும்பிச் சென்றார். இந்த வீடியோ கட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், மேலிட அழுத்தம் காரணமாக திரும்பிச் சென்றதாக செய்திகள் பரவியது.
இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை சைதாப்பேட்டையில் தர்பூசணி தொடர்பான குழப்பங்களை மக்களிடையே போக்கும் வகையில் செய்தியாளர்களுக்கு நீண்ட நேரம் விளக்கமளித்துவிட்டு, அண்ணாசாலையில் ஆய்வுக்காக வந்து கொண்டிருந்தேன்.
நந்தனம் தேவர் சிலை அருகே வந்தபோது எனக்கு படபடப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எல்ஐசி அருகே வரும்போது மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தே, எனது மனைவிக்கு போன் செய்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்வதாக கூறினேன்.
ஆனால் ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்யாமல் தப்பித்து ஓடுவது போல சித்தரித்து, செய்திகளை பரப்பிவிட்டனர். நான் எனது கடமையில் இருந்து தவறவில்லை. நான் யாருடைய மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன். பிலால் ஓட்டலை ஆய்வு செய்வதோ, அல்லது மூடுவதோ எனக்கு ஒன்றும் பெரிய வேலை கிடையாது.
எனது உடல்நிலை ஒத்துழைக்காததால்தான் திரும்பிச்செல்ல நேரிட்டது. ஒரு மனிதருக்கு படபடப்பில் மயக்கம் ஏற்படுவது இயல்புதான். எனவே இவற்றை திரித்து வேறு மாதிரியான செய்திகளை பரப்புவதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.