தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை: சென்னை ஐஐடி குழு ஆய்வுக்கு உத்தரவு

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை: சென்னை ஐஐடி குழு ஆய்வுக்கு உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து, கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு ஆய்வு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப். 7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது. இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை.

அரசின் நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்ட போது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படாமலேயே வண்ணம் பூச்சு பணி நிறைவடைந்துள்ளது.

எனவே, கோயிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தடை விதித்தும், கோயில் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமித்தும், கோயில் புனரமைப்பு பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

ஆகவே அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலின் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிசேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், கோயில் புனரமைப்பு பணிக்காக அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு இன்று விசாரித்தது. அரசு தரப்பில், திருப்பணிகள் நூறு சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், கோயில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அதற்கு முன்ப கும்பாபிஷேகம் நடத்துவது பக்தர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கோயில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்பு கும்பாபிஷேகம் நடத்துவது சரியல்ல. எனவே கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை விதித்தும். கோயில் புனரமைப்பு பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆகியோர் ஆய்வு நடத்தி ஏப். 21-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in