

சென்னை: வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்களை தங்கு தடையின்றி தொடர்ந்து விநியோகம் செய்வதில் முனைப்புடன் உள்ளோம். எனவே, வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எண்ணெய் துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மண்டல மொத்த எல்பிஜி வாகன உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களது நுகர்வோர்களுக்கு போதுமான எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை தடையின்றி விநியோகித்து வருகின்றன.
தற்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர்களது பாட்டிலிங் ஆலைகளில் மொத்த சிலிண்டர்களின் இருப்பு போதிய அளவில் உள்ளன. ஆகவே எல்பிஜி விநியோகஸ்தர்கள் எப்போதும்போல தங்களது சேவையைத் தொடர்வார்கள்.
தொடர்ந்து பேச்சுவார்த்தை: தற்போதைய வாகன போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி அனைத்து மண்டலங்களிலும் உள்ள வாகன உரிமையாளர்களுடன் விரிவாக கலந்து பேசி முடிவு செய்யப்பட்டது. இதில் அவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பல விளக்கங்கள் வழங்கப்பட்டன.
அரசு வழிகாட்டுதல்கள், மத்திய கண்காணிப்பு வழிகாட்டுதல்கள் போன்றவற்றை பின்பற்றியே ஒப்பந்தப்புள்ளி விதிகள் தயாரிக்கப்பட்டன. எண்ணெய் நிறுவனங்கள், டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு விரைவில் ஒரு தீர்வு காண முயற்சி செய்து வருகின்றன.
எனவே, அனைத்து நுகர்வோர்களின் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்களை தங்கு தடையின்றி தொடர்ந்து விநியோகம் செய்வதில் முனைப்புடன் உள்ளோம். வாடிக்கையாளர்கள் இதுகுறித்து பதற்றம் அடைய வேண்டாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.