தமிழக - கர்நாடக எல்லையில் இருமாநில போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்

தமிழக - கர்நாடக எல்லையில் இருமாநில போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்
Updated on
1 min read

ஓசூர்: மராட்டிய மொழி பேசவில்லை என நடத்துநரை தாக்கியதைக் கண்டித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக்கட்ட எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்தும் கன்னட அமைப்பினர் கர்நாடகவில் இன்று முழு கடை அடைப்பு அறித்துள்ளதால் இரு மாநில போலீஸார் பாதுகாப்புடன் தமிழக பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மராட்டிய மொழி பேசவில்லை எனக் கூறி கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துநரை அங்குள்ள மராட்டிய அமைப்பினர் தாக்கினர். இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இது மொழி பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பிற்கு அங்குள்ள கன்னட அமைப்பினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதேபோல காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இந்த முழு அடைப்பு நடைபெறும் என கன்னட அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இதன் காரணமாக பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கர்நாடக மாநில அரசு முழு அடைப்பிற்கு ஆதரவு இல்லாத நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற உள்ள அரசு தேர்வுகளும் வழக்கம்போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல இயக்கப்பட்டு வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எனினும் தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இன்று காலை கன்னட அமைப்பினர் சார்பில் தமிழ்நாட்டிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், காவிரி ஆறு தங்களது என கூறி முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக எல்லையை நோக்கி வர முயன்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரை அம் மாநில போலீஸார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை எனினும் பாதுகாப்பு காரணங்கள் கருதி போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தமிழக மாநில எல்லைப் பகுதியான ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் தமிழக போலீஸாரும் கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in