

அதிமுக எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று, தாமதமின்றி பேருந்துகளை பேரவை வளாகத்துக்கு வரவைத்த போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏக்களை அதில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
சட்டப்பேரவையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் நேற்று பேசியபோது, ‘‘பேரவை கூட்டம் முடிந்ததும் உறுப்பினர்களை எம்எல்ஏ விடுதிக்கு அழைத்து செல்லும் பேருந்துகள் தாமதமாக வருகின்றன. நேற்றுகூட அரைமணி நேரத்துக்கு மேல் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, கூட்டம் முடிவதற்கு 2 நிமிடம் முன்பாக பேரவை வளாகத்தில் பேருந்துகளை நிறுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “பேரவை முடிந்து அனைத்து கார்களும் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முனைவதால் ஏற்படும் நெரிசல் காரணமாக, பேருந்துகள் வருவதற்கு தாமதம் ஆகியிருக்கும். இன்று பேரவை முடிந்த பிறகு, நானே நின்று முறையாக பேருந்துகளை வரவைத்து உறுப்பினர்களை அனுப்பி வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அதன்படியே, பேரவை முடிந்த உடனே, எம்எல்ஏக்களுக்கான பேருந்துகள் தலைமைச் செயலக வளாகத்தில் வந்து நின்றன. அமைச்சர் சிவசங்கர் தானே முன்நின்று, எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், தன்னிடம் கோரிக்கை வைத்த ஜெயசீலன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்களை ஒவ்வொருவராக பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். இதேபோல தினமும் பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.