பழநி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற எதிர்பார்ப்பு

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு இருக்கும் பழநி. | படம்: நா.தங்கரத்தினம் |
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு இருக்கும் பழநி. | படம்: நா.தங்கரத்தினம் |
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழநி பிரிக்கப்பட்டு, 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த 1985-ம் ஆண்டு செப்.15-ம் தேதி மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்ததுதான் திண்டுக்கல் மாவட்டம். திண்டுக்கல் 7 சட்டப்பேரவை தொகுதி, ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 14 ஒன்றியம், 23 பேரூராட்சி, 306 ஊராட்சிகளை உள்ளடக்கியது.

இதில், ஆன்மிக தலமான பழநிக்கும், கோடை வாசஸ்தலமான மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதேபோல், தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டும் ஒன்று.

இங்கிருந்து நாள்தோறும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கும், கேரளாவுக்கும் லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. நகராட்சிகளான ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் விவசாயம்தான் முக்கிய தொழிலாக உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் காய்கறி மார்க்கெட்டையும், பழநி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாத் தொழிலையும் பலர் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

அதிமுக, திமுக கொடுத்த வாக்குறுதி: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய முன்னாள் முதல்வர் பழனிசாமி, பழநி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்தார். அதேபோல், தற்போதைய பழநி எம்எல்ஏ செந்தில்குமாரும், திமுக ஆட்சிக்கு வந்ததும் பழநி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என உறுதியளித்தார்.

பழநி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை அதிமுக, திமுக என இரு கட்சியினரும் கொடுத்ததால், யார் ஆட்சிக்கு வந்தாலும் பழநி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில் பழநி மக்கள் இருந்தனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகிறது.

இன்னும் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே இருப்பதால் வரும் கூட்டத் தொடரில், பழநி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி, ஒட்டன்சத்திரம் தொகுதி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதியை ஒன்றிணைத்து, பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட பிரிப்புக்கான பணிகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பல மணி நேர பயணம்: அடிப்படை வசதிகள், பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, பழநியில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள ஆட்சியர் அலுவலகம் செல்ல 56 கி.மீ., கொடைக்கானலில் இருந்து பழநி வழியாக திண்டுக்கல்லுக்கு 115 கி.மீ., வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல்லுக்கு 90 கி.மீ., ஒட்டன்சத்திரத்தில் இருந்து 28 கி.மீ., தூரம் பயணம் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட அனைத்துத் துறை மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து வர ஒரு நாள் பணியை விடுத்து, பல மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.

அதே சமயம், பழநியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைந்தால் பழநியை சுற்றியுள்ள ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், மடத்துக்குளம், உடுமலை பகுதி மக்கள் சுலபமாக வந்து செல்ல முடியும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மட்டும் கட்டினால் போதும். மற்ற அனைத்துத் துறை அலுவலகங்களும் பழநியில் உள்ளன.

எதிர்பார்ப்பும், எதிர்ப்பும்: மாவட்டமாக அறிவித்தால் பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகள் மேலும் வளர்ச்சி அடையும். பழநியில் பக்தர்களுக்கும், கொடைக்கானலின் சுற்றுலா வளர்ச்சிக்கும் எந்த சிறப்பு திட்டங்களும் இதுவரை இல்லை. பழநி மாவட்டமானால் பழநியும், கொடைக்கானலுக்கும் சிறப்பு திட்டங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இங்கு வந்து செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மூலம் மாவட்டத்தின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பழநியை தனி மாவட்டமாக அறிவித்தால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். நகர் பகுதி மக்கள் மட்டுமின்றி இன்னும் சாலை வசதிகளே இல்லாத மலைக்கிராம மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும்.

ஒட்டன்சத்திரம், பழநி, மடத்துக்குளம், உடுமலை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி பழநி மாவட்டமாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்க ஆவண செய்யுமாறு, ஒட்டன்சத்திரம் தொகுதி எம்எல்ஏவும், உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி கேட்டுக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

பழநி மாவட்டமாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளை பழநியுடன் இணைத்து புதிய மாவட்டமாக அறிவிக்க அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எங்களுடைய கலாச்சாரமும், பழக்க வழக்கங்களும் வேறு. எனவே, பழநியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, தற்போது உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in