Published : 11 Mar 2025 05:57 AM
Last Updated : 11 Mar 2025 05:57 AM
சென்னை: தலைமைச் செயலகம் எதிரே பள்ளி வேன் உள்பட அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். சென்னை ராஜாஜி சாலையில் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. எதிரே சாந்தோமில் உள்ள பள்ளி ஒன்றிலிருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
தலைமைச் செயலகம் எதிரே செல்லும்போது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப் தடுப்புகளை தாண்டி வலதுபுறம் திரும்பி எதிர் திசையில் சென்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பள்ளி வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும், பள்ளி வேன் மீது பின்னால் வந்த கார் ஒன்றும் மோதியது. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கோட்டை எதிரே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதால் அந்த சாலை மேலும் பரபரப்பானது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் வந்த 7 மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர்.
இதில் 6 மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதல் உதவி அளிக்கப்பட்டது. ஒரு மாணவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னதாக தகவல் அறிந்து யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், விபத்தை ஏற்படுத்தியது ஒக்கியம் துரைப்பாக்கம், சக்தி கார்டன் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி பழனியப்பன் (66) என்பது தெரிந்தது. அவருக்கு உடல் நலக்குறைவு இருப்பதும், உடலில் திடீரென சர்க்கரை அளவு அதிகரித்து தலைசுற்றலுடன் மயக்கம் ஏற்பட்டு கண்பார்வை சரியாக தெரியாததால் கார் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்திவிட்டதாக போலீஸாரிடம் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரையும் போலீஸார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT