காமராஜர் பல்கலை. பேராசியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
காமராஜர் பல்கலை. பேராசியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு  எதிராக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - காரணம் என்ன?

Published on

மதுரை: காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி பேராசியருக்கு எதிரான புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

மதுரை அழகர்கோயில் சாலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்படுகிறது. பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இங்கு படிக்கின்றனர். இக்கல்லூரியின் பொருளாதார துறையின் 2-வது ஷிப்ட் மாணவர்களின் வருகைப் பதிவேடு மாயமானது. இதற்காக அத்துறை தலைவர் மாணவர்களிடம் பணம் வசூலிக்க முயன்றது உள்ளிட்ட மாணவர்களுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, மாணவர்கள் வலியுறுத்தி ஏற்கெனவே போராட்டம் நடத்தியிருந்தனர்.

சிறப்புக் கமிட்டி அமைத்து விசாரிக்கப்படும் என, மாணவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொருளாதாரத் துறை பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இன்று (மார்ச் 10) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாரத்துறை தலைவருக்கு எதிராகவும், கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியும் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.

கன்வீனர் உத்தரவின் பேரில் அமைத்த சிறப்புக்குழு மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, “மாணவர்கள் புகார் குறித்து விசாரிக்க, பல்கலைக்கழக, கன்வீனர் சிறப்புக் குழு அமைத்துள்ளார். விசாரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in