Last Updated : 09 Mar, 2025 06:02 PM

1  

Published : 09 Mar 2025 06:02 PM
Last Updated : 09 Mar 2025 06:02 PM

''விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும்'': துரை வைகோ

துரை வைகோ | கோப்புப் படம்

மதுரை: விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்றும், அவரது செயல்பாடுகளை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழா நடந்தது. மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தென்மாவட்டங்கள் போன்ற சில இடங்களில் பன்றி தொல்லை போன்ற பல்வேறு இடர்பாடுகளால் விவசாயம் செய்ய முடியாத சூழலில் மக்காச்சோளத்துக்கு கடந்த ஆண்டு விதித்த செஸ் வரி நீக்கவேண்டும் என, முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

இதைத்தொடர்ந்து மக்காச்சோளத்திற்கான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் பிளாஸ்டிக் லைட்டர் போன்ற உதரி பாகங்கள் இறக்குமதியை தடுக்கவேண்டும். உள்ளூர் பகுதியில் அதற்கான உதரி பாகங்களை தயாரிக்க வழிவகை செய்யவேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

பிரசாந்த் கிஷோர் என்பவர் அரசியல் ஆய்வாளர். அவர் சொல்வதெல்லாம் 100-க்கு 100 நடப்பது கிடையாது. அவரது சொந்த இயக்கமே பிஹாரில் தோல்வி அடைந்துள்ளது. அவர் ஜெயிக்கும் குதிரையில் தான் பயணிப்பார். தமிழகத்தில் விஜய் பற்றி அவர் கூறுவது நடக்காது. விஜய் பெரிய நட்சத்திரம். அவர் பின்னால் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். அவரது சிந்தாத்தை வரவேற்கிறோம். அவர் மக்களிடம் செல்லவேண்டும். பத்திரிகையாளர்களை சந்திக்கவேண்டும்.

அவரது செயல்பாடுகளை பொறுத்தே அவரின் அரசியல் எதிர்காலம் அமையும். திமுக அரசை எதிர்க்கும் விதமாக அவர் கருத்துக்களை சொல்கிறார். அரசு எப்படி செயல்பட்டது என்பதை 2026-ல் தேர்தலில் மக்கள் தீர்மானிப்பர். ஆளுநராக இருந்த தமிழிசை கல்வி வளாகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வது, கையெழுத்து வாங்குவது தவறு. கல்வி வளாகத்தில் அரசியல் பேசுவதும் தவறு. ஆளுநராக இருந்துள்ளார்.

கட்சியிலும் முக்கிய பதவியில் இந்திருக்கிறார். அது கூட அவருக்கு தெரியவில்லை. நான் தீவிரவாதியா என, கேட்கிறார். தீவிரவாதியை விட மதங்களை வைத்து அரசியல் செய்பவர்கள் மோசமானவர்கள். ஆங்கிலம் கூடாது என ,வடமாநிலங்களில் பேசுகின்றனர். ஆங்கிலம் இன்றி வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா? ஆங்கிலம் இல்லாத இந்தியாவை உருவாக்க அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவகள் வடமாநிலங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். 100 நாள் போன்ற வேலை திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடந்த 3 மாதமாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை.

திராவிட இயக்கங்கள் தமிழுக்கு உண்டான அங்கீகாரம் கொடுத்திருக்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடு பல்கலைக்கழகங்களுக்கும் தமிழை வளர்க்க முயற்சி கின்றனர். அதற்கு முதல்வர் பட்டியல் போட்டு சொல்கிறார். அதுபோன்று திராவிட இயக்கங்கள் தமிழ் வளர்ச்சிக்கென எடுத்த முயற்சிகளை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.துரை வைகோவுடன் மாநகர மாவட்ட மதிமுக செயலாளர் முனியசாமி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x