Published : 09 Mar 2025 04:49 PM
Last Updated : 09 Mar 2025 04:49 PM
சென்னை: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த இருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள், கடந்த 14 ஆண்டுகளாக ரூ. 12,500 தொகுப்பூதியத்துக்கு பணியாற்றி வருகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக அளித்திருந்தது. அதன்படி, பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் இந்த பட்ஜெட்டையொட்டி கோரிக்கை மனுக்களை தினமும் அனுப்பி வருகின்றனர்.
இந்த நீண்கால கோரிக்கையை இந்த பட்ஜெட்டில் முதல்வர் நிறைவேற்றி, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வார் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்ப்போடு உள்ளோம். தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2 ஆயிரம் கணினி அறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல்திறன் ஆகிய பாடங்களில் பணிபுரிகின்ற ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே 12 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும்.
பகுதிநேர ஆசிரியர்களின் கஷ்டங்கள் அனைத்தும் முதல்வருக்கு தெரியும். பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுத்தது, கடந்த 10 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைக்கு குரல் கொடுத்து நம்பிக்கை கொடுத்த முதல்வரை தான் மலை போல் நம்பி உள்ளோம். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முன்னேற்ற முதல்வரால் மட்டுமே முடியும். இந்த பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்து விட்டால் முதல்வருக்கு பாராட்டு விழாவை, இந்த 12 ஆயிரம் குடும்பங்களும் எடுப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT