

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற காமாட்சியம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று நடைபெற்ற திருத்தேரோட்ட உற்சவத்தில், காமாட்சியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு ராஜவீதிகளில் தேர் வலம் வந்தது.
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்ட உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் காமாட்சியம்மன் தேரின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு ராஜவீதிகளிலும் தேர் வலம் வந்தது. வழி எங்கிலும் பொதுமக்கள் ஆங்காங்கே நின்று காமாட்சியம்மனை தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மாலையில் தேர் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டிருந்தது.