Published : 06 Mar 2025 04:49 PM
Last Updated : 06 Mar 2025 04:49 PM

3 ஆண்டுக்கு மேலாக டெண்டர் விடப்படாத 40 வருவாய் இனங்கள்: மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு அபாயம்

மதுரை: மதுரை மாநகராட்சியில் 40 முக்கிய வருவாய் இனங்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ‘டெண்டர்’ விடாமல் மாநகராட்சியே எடுத்து நடத்தி வருகிறது. ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் பின்னணியில் டெண்டர்தாரர்கள் ‘சிண்டிகேட்’ அமைத்து புறக்கணிப்பதால் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் வருவாய் இழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு வரி வருவாய், வரியில்லா வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.480 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இதில், சொத்து வரி மூலம் மட்டுமே ரூ.365 கோடி வருவாய் கிடைக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக டெண்டர் விடப்படும் வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. 3 ஆண்டுக்கு ஒரு முறை வருவாய் இனங்களை டெண்டர் விட வேண்டும். ஆனால், டெண்டர் தேதி முடிந்தும், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக டெண்டர் விடப்படாத வருவாய் இனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், அதனை ஏலம் விடாததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த காலத்தில் ஆணையர்களாக இருந்த கார்த்திகேயன், மதுபாலன், தினேஷ்குமார் ஆகியோர் இருந்தபோது, டெண்டரில் ஏலதாரர்களின் ‘சிண்டிகேட்’டை தடுக்க அரசியல் கட்சிகள் எதிர்ப்பையும் மீறி நியாயமாக டெண்டர் விட்டு மாநகராட்சிக்கு வருவாயை அதிகரிக்க டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அவர்களால் ஏலதாரர்கள் ‘சிண்டிகேட்’ புறக்கணிப்பால் ஏலம் விட முடியவில்லை. ஆணையராக இருந்த தினேஷ் குமார் ஒரு படி மேலாக சென்று மாநகராட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ‘ஆன்லைன்’ டெண்டர் முறையை அறிமுகம் செய்து முக்கிய வருவாய் இனங்களை டெண்டர் விடுவதற்கு அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால், இதற்கு உள்ளூர் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் பின்னணியில் ஏலம் தாரர்கள், ‘ஆன்லைன்’ டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘சிண்டிகேட்’ அமைத்து டெண்டரை புறக்கணிக்க செய்தனர். அதனால், தற்போது வரை சுமார் 40 முக்கிய வருவாய் இனங்கள் டெண்டர் விடப்படாமல் மாநகராட்சியே எடுத்து நடத்தி வருகிறது. மாநகராட்சியில் ஏற்கெனவே ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் போதுமான அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு டெண்டர் விடப்படாத இந்த வருவாய் இனங்கள் அன்றாடம் வசூலை கண்காணிக்க முடியவில்லை. இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு ஊழியர்கள் கூறும்போது, “மாநகராட்சிக்கு சொத்துவரி, கடைகள் வாடகை, டெண்டர் விடப்படும் வருவாய் இனங்கள் உள்பட பல்வேறு வருவாய் இனங்கள், மானிய நிதி, கடன் தொகை உள்ளிட்டவை மூலம் மட்டும் கடந்த 2024-25ம் ஆண்டு மட்டும் ரூ.1,296.06 வருவாய் கிடைப்பதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், திட்டமிட்டப்படி, டெண்டர் விடப்படும் வருவாய் இனங்கள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி இருசக்கர வாகன காப்பகம், மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பழ மார்க்கெட் நுழைவு கட்டணம், தெற்கு வாசல் சாலையோர காய்கறி மார்க்கெட் கடைகள், தெற்கு வாசல் மீன் மார்க்கெட், மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் நுழைவு கட்டணம், வாரச்சந்தைகள், ஆரப்பாளையம் இரு சக்கர வாகன நிறுத்தம், கோச்சடை லாரி ஸ்டாண்ட், தெற்கு காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட 40 வருவாய் இனங்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக டெண்டர் விடப்படவில்லை. இந்த வருவாய் இனங்களை டெண்டர் விட்டால் ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் ரூ.40 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.

டெண்டர் விடப்படாததால் மாநகராட்சி ஊழியர்களே வசூல் செய்கிறார்கள். ஆனால், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் முறையான வருவாயை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஆணையர் சித்ரா, டெண்டர் விடப்படாத வருவாய் இனங்களை ஆய்வு செய்து, டெண்டர் விடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “டெண்டர் விடுவதற்கு மாநகராட்சியும் இதுவரை 3 முறை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், யாரும் டெண்டரில் பங்கேற்க முன்வரவில்லை. அதனால், இந்த வருவாய் இனங்கள் டெண்டர் விட முடியவில்லை. தற்போது வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் மேலும் 16 வருவாய் இனங்களையும் சேர்த்த 46 வருவாய் இனங்களுக்கும் மறு டெண்டர் வைப்பதற்கு ஆணையர் பார்வைக்கு கோப்புகளை வைத்துள்ளோம்,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x