

மதுரை: சட்டம், ஒழுங்கு மற்றும் பல்வேறு குற்றத்தடுப்பு குறித்து தென்மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.
தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் இரண்டு நாள் பயணமாக இன்று (மார்ச் 6) காலை மதுரை வந்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. காவல் துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது, சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து அந்த குற்றங்களை தடுக்க வேண்டும்.
போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நட்புறவை பேணி காக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மேலும், உரிய காரணங்களோடு விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தேவையான உணவு , குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
காவல்துறையினரின் மனஅழுத்தத்தைப் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணாக்கர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் அவுறுத்தினார்.
தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா , மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், மதுரை எஸ்.பி. அரவிந்த், விருதுநகர் எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. மதுரையில் தங்கியிருக்கும் அவர் , நாளை (மார்ச் 7) குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று காவல்துறையினரிடம் குறை கேட்பு மனுக்களைப் பெறுகிறார்.