கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு நடைமேம்பாலம்: நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஆட்சியரின் அறிவிப்பு ரத்து

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு நடைமேம்பாலம்: நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஆட்சியரின் அறிவிப்பு ரத்து
Updated on
1 min read

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மாநகர் பகுதிக்குள் பயணிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேருந்து முனையத்தில் இருந்து ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் சாலையின் குறுக்கே நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் ஒரு ஏக்கர் 45 சென்ட் நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்தாண்டு ஜனவரியில் அறிவி்ப்பு வெளியிட்டிருந்தார்.

இதற்கான ஆட்சேபங்களை தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடிவதற்குள் பொது பயன்பாட்டுக்காக இந்த நிலம் தேவைப்படுகிறது என ஆட்சியர் கடந்தாண்டு ஜூனில் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதை எதிர்த்து பிரீமியர் லெதர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ‘‘நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான அறிவிப்பை சட்ட ரீதியாக தமிழக அரசின் அரசிதழில் தான் வெளியிட வேண்டும்.

ஆனால் செங்கல்பட்டு ஆட்சியர் மாவட்ட அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் தங்களது ஆட்சேபங்களை தெரிவிக்கும்முன் இந்த நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என ஆட்சியரே ஒருதலைபட்சமாக அறிவிக்க முடியாது.

எனவே, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்பட வில்லை என்பதால் இதுதொடர்பான மாவட்ட ஆட்சியரின் இருஅறிவிப்புகளும் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி நடைமேம் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை மீண்டும் தொடரலாம்’’, என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in