

உதகை: “தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும், முடக்க வேண்டும் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” என்று நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசினார்.
நீலகிரி மாவட்ட திமுக குழு கூட்டம் உதகையில் இன்று (மார்ச் 5) நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசியது: “எம்ஜிஆருக்கு பிறகு பெண்கள் மத்தியில் ஆதரவு பெற்ற முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் எதிர்ப்பை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். மத அடிப்படைவாத மத்திய அரசு தமிழக அரசை கலைக்க மட்டும் இல்லை. நிர்வாக ரீதியாகவும் அனைத்து வகையிலும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழக நிர்வாத்தையும், எதிர்கால சந்ததினரையும் முடக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது. இதையெல்லாம் எதிர்த்து முதல்வர் போராடி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக இருக்கும் வரையில் தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு. எனவே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவர் மீண்டும் முதல்வராக கட்சியினர் பாடுபட வேண்டும்.
வரும் ஏப்ரல் மாதம் முதல்வர் நீலகிரி மாவட்டம் வந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். மாவட்டத்தில் நிலவி வரும் கட்டிட வரன்முறை பிரச்சினை, கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பிரிவு 17 பிரச்சினை, மின் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைக்களுக்கான தீர்வு முதல்வரின் அறிவிப்பு இடம் பெறும்,” என்று அவர் பேசினார். இந்த கூட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். நகர செயலாளர் ஜார்ஜ் நன்றி கூறினார்.