

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி - போரூர் பாதையில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் நிறுவும் பணி தொடங்கியுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் ஒன்றாகும்.
இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாக அமைகிறது. 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இந்நிலையில், போரூர் - பூந்தமல்லி இடையேயான 9 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் நிறுவும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் தயாரிக்கப்பட்ட 40 மின்தூக்கிகளையும் , சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60 நகரும் படிக்கட்டுகளையும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் வாங்கியுள்ளனர். இவற்றை இத்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - போரூர் பாதையில் பயணிகள் எளிதாகச் செல்வதை உறுதி செய்யும் வகையில், அனைத்து இடங்களிலும் மின்தூக்கிகள் நிறுவப்படும். மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் செல்லக்கூடிய வகையில் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
புதிய நகரும் படிக்கட்டுகள் கொண்ட முதல் நிலையமாக போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கும். தற்போது மின்தூக்கிகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். இதுதவிர, காட்டுப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் தெள்ளியகரம் மெட்ரோ ரயில் நிலையம் அடுத்ததாக மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இத்தடத்தில் முல்லைத்தோட்டம் - கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப்பணிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.