

மதுரை: ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் சமத்துவச் சிந்தனையுடன் செயல்பட பயிற்சி அளிக்கவேண்டும் என மதுரையில் விசிக சார்பில் நடந்த ‘புல்லட்’ பேரணியில் பங்கேற்ற கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் வலியுறுத்தினார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகிலுள்ள மேலபிடாவூரைச் சேர்ந்தவர் அய்யாசாமி (19). பட்டியலின கல்லூரி மாணவரான இவரை, சில நாளுக்கு முன்பு அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஆயுதங்களால் தாக்கி, கையில் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அய்யாசாமி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில், அய்யாச்சாமி ஊருக்குள் புல்லட்டில் சென்றதால் ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையமும் விசாரித்தது.
இந்நிலையில், சொந்த கிராமத்திற்குள் ‘புல்லட்’ ஓட்டியதால் பட்டியலின மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘புல்லட்’ பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். நீதிமன்றம் மூலம் இப்பேரணிக்கு அனுமதி பெற்றனர். இதன்படி, மதுரை மாவட்ட நீதிமன்ற பகுதியிலிருந்து காந்தி அருங்காட்சியகம் வரையிலுமான சமத்துவ புல்லட் பேரணி இன்று மதியம் தொடங்கியது.
விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அவரும் புல்லட் ஓட்டியபடி பேரணியில் பங்கேற்றார். கட்சியின் கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் செல்லப்பாண்டியன், கனியமுதன், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாணவன் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பேரணிக்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.
முன்னதாக, சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியது: "புல்லட்டில் கல்லூரிக்குச் சென்ற மாணவனின் கையை வெட்டி இருக்கின்றனர். இதற்கு எதிராக அனைத்து சமூகத்தினரும் பங்கேற்ற சமூக நீதிப் புல்லட் பேரணி நடந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சமத்துவ சிந்தனையுடன் நடந்து கொள்ள பயிற்சி அளிக்கவேண்டும். இல்லையென்றால் அனைத்து பிரச்சினைகளையும் வறட்டுத்தனமாக சட்ட ஒழுங்கு பிரச்சினையாக பார்க்கும் நிலை உருவாகும்.
கடந்த 30 ஆண்டுக்கு முன்பாக ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒற்றுமையை பெற முழங்கிய பாமக திசைமாறி தலித்துகளுக்கு எதிரான வன்மைத்தை உமிழ்வது வேதனைக்குரியது. விசிக கொடிக் கம்பம் சேதம் தொடர்பாக பாமகவினருக்கு அன்புமணி கூறிய கூற்று நம்பிக்கை அளிக்கிறது என்றாலும், வெளிப்படையாக அதற்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். பாமக தலைவர் ராமதாஸ் அவரது தோட்டத்தில் கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் , தந்தை பெரியார் சிலைகளை வைத்துள்ளார். அவைகள் அடையாள அரசியலாக இல்லாமல் அடித்தட்டு மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் அரசியலாக அமையவேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.